நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்து சேவையை நாளை தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் வடதாரகை, குமுதினி, மற்றும் நெடுந்தாரகை ஆகிய அரச படகுகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வடதாரகை பயணிகள் படகு பழுதடைந்து திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவைப்பட்ட நிலையில் ஏற்பட்ட அதிக செலவீனம் காரணமாக குறித்த பிரதேச சபையினால் நெடுந்தாரகையின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட புரெவி புயல் காரணமாக குமுதினி பயணிகள் படகும் பழுதடைந்துள்ள நிலையில் நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.