இந்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே பலர் அணி திரண்டு கண்டனங்களை வெளியிட்டனர்.
இதன்போது அங்கிருந்த சிலர் காலிஸ்தான் கொடியை காந்தி சிலை மீது போர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய மரியாதைக்குரிய அடையாளமான காந்தி சிலை மீது காலிஸ்தான் கொடியை போர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் இது தொடர்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக் குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.