வவுனியா வடக்கு வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி சிறிலங்கா காவல்துறையினரும், தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன், தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலயத்தின் சார்பில் முன்னிலையாகிய பரிபாலன நிர்வாக சபை தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோரை கைது செய்யவேண்டும் என்றும் வழக்கு முடிவடையும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்றும் நீதிவானிடம் காவல்துறையினர் கோரிக்கை முன்வைத்தனர்.
அவர்களின் கோரிக்கை நிராகரித்த நீதிவான், சரீர பிணையில் ஆலய நிர்வாகத்தினரை விடுவித்து, நவம்பர் 6 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர்,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த வழக்கு, வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை முன்னரே அழைக்குமாறு தொல்பொருட் திணைக்களம் மற்றும் காவல்துறையினர் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகளால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஆலய நிர்வாகத்தினர் மன்றில் சமூகமளிக்கவில்லை.
வழக்கு திகதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினர் தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர், தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மன்றில் முன்னிலையாகாத ஆலய நிர்வாகத்தினருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.