யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ யாழ். மாவட்டத்தில் மருதனார்மடம் சந்தை பகுதியில் இதுவரையில் 32 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அவர்கள் மூலமாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால், யாழ். குடாநாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
மருதனார்மடம் சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்களை, மறுஅறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தையில் ஏற்பட்ட பரவலை அடுத்து, மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாட்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை, ஆயிரத்து 144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.