எதிர்க்கட்சிகளின் கடமை அரசாங்கத்தை எந்நேரமும் எதிர்ப்பதே என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சரியான திசையில் பயணிக்க வழி நடத்த வேண்டும் என்பதே எனது கருத்து என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தில் வாக்களிப்பில் பங்கெடுக்காமை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு அரசியலால் நாம் கண்ட நன்மை ஒன்றுமில்லை. அத்துடன் இணக்க அரசியல் என்று கூறி சுயநலமிகள் இணக்க அரசியல் செய்து வந்ததால் எம் மக்கள் கண்ட நன்மை ஒன்றுமில்லை.
ஏற்கனவே அரசாங்கத்தை நான் காரசாரமாக சாடியாகிவிட்டது. 20 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தேன். திரும்பவும் வேண்டும் போது அவ்வாறு செய்வேன். அதாவது உண்மைகளை எடுத்துரைப்பேன்.
ஆனால் பொதுவாக எதிர்த்து வாக்களிப்பதே எனது நிலைப்பாடு என்று பலர் எண்ணியிருந்தார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை.
அரசாங்கம் பெரும்பான்மை நிலையைப் பெற்ற ஒன்று. எமது வாக்குகள் அவர்களுக்குத் தேவையற்றது. நாங்கள் அவர்களுக்கு எதிராக வாக்களித்தாலும் ஒன்று தான். நடுநிலைமை வகித்தாலும் ஒன்று தான் என்று மேலும் தெரிவித்தார்.