மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கொல்லப்பட்ட கைதிகளில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் தான் உயிரிழந்துள்ளனர் என்று நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறையில் அண்மையில் நடந்த கலவரங்களின் போது, உயிரிழந்த 11 கைதிகளின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று மஹர நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
உயிரிழந்த 11 கைதிகளில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து.
ஏனைய, நான்கு கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதா என்பது குறித்து நீதிமன்றினால் இன்று ஆராயப்பட்ட போது, அவர்கள் நால்வரும், துப்பாக்கிச் சூட்டினால் தான் உயிரிழந்தனர் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு சடலங்களையும் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேவேளை, மஹர சிறையில் உள்ள கைதிகள் போதைப் பொருளை உட்கொண்டு விட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் தான் உயிரிழந்தனர் என்று சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.