வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாறுவதைத் தடுக்கும் நோக்கில், தொற்றாளர்கள் அதிகமாகவுள்ள இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால் அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு ஏற்கனவே பொதுமக்களுக்கு ஓர் அறிவித்தலை வழங்கியிருந்தேன்.
ஆனால் இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்று தொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.