சங்கானைச் சந்தையை மையப்படுத்தி புதியதொரு கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மருதனார்மடம் சந்தை வர்த்தகர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அச்சம் தீவிரமடைந்துள்ளது.
மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய பலர் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சங்கானை சந்தை வர்த்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளில் சங்கானை சந்தையும் ஒன்று என்பதாலும், மருதனார்மடம் சந்தை மூடப்பட்ட பின்னர், சங்கானை சந்தையே அதிகளவு மக்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், இந்தச் சந்தையை மையப்படுத்தி புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து தோன்றியுள்ளது.
நேற்று 8 தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டதை அடுத்து. சங்கானை மரக்கறிச் சந்தை, மீன் சந்தை என்பன உடனடியாக மூடப்பட்டுள்ளதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் நடனேந்திரன் அறிவித்துள்ளார்.
தொற்றாளர்களில் ஒருவர் நேற்று சங்கானை மீன் சந்தைக்கு சென்று வந்தார் என்றும், தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள இரண்டு சந்தைகளையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்குப் பின்னரே திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா தொற்று அச்சத்தினால் வலிகாமம் பகுதியின் பல்வேறு பகுதிகளும், மக்கள் நடமாட்டங்கள் குறைந்து வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.