நைஜீரியாவில் உள்ள பாடசாலையிலிருந்து போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 17 மாணவர்கள் மீட்கப்பட்டதாக கட்சினா மாநில ஆளுநர் அமினு மசாரி தெரிவித்துள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் அண்டை மாகாணத்தில் உள்ள ஜம்பாரா காட்டில் உள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
முன்னதாக நைஜீரியாவின் பாதுகாப்பு அமைச்சர் பஷீர் சாலிஹி மகாஷி சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வருகை தந்து மாணவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கையின் போது ஒரு பாதுகாப்பு காவலர் காயமடைந்துள்ளதாகவும், கூடுதல் பாதுகாப்பு படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அந்த பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கட்சினா மாநில பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் காம்போ இசா தெரிவித்தார்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 300இற்கும் மேற்பட்ட மாணவர்கள் போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டனர்.