யாழ்ப்பாணக் குடாநாட்டின் நான்கு பிரதான சந்தைகளில், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மருதனார்மடம் சந்தையில் கடந்தவாரம் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, பிரதான சந்தைகளின் வியாபாரிகள் மற்றும் நுகர்வோருக்கு பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து சங்கானை சந்தையில் நான்கு வியாபாரிகளுக்கும், சுன்னாகம் சந்தையில் இரண்டு வியாபாரிகளுக்கும் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், திருநெல்வேலிச் சந்தையிலும், ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையில் இருந்த 393 பேரின் மாதிரிகள் நேற்று முன்தினம் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்ட நிலையில், 39 வயதுடைய ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தையில் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர், மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றுபவர் என்றும், உரும்பிராயைச் சேர்ந்தவர் என்றும், கூறப்படுகிறது.
இதையடுத்து, மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நெல்லியடி சந்தை வியாபாரிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், எவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, கொரோனா பரவல் அச்சத்தினால், வட மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும், காலவரையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.