மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய மூவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 433 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே மூவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இளவாலை, மல்லாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த தலா ஒருவர் என வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று மட்டும் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிடறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.