ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கடிதம் அனுப்ப வேண்டும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்
சுமந்திரனின் இந்த யோசனை சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில் இருப்பதாகவும், அதனை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்றும், விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரனுக்கு அனுப்பி வைத்துள்ள மறுபதில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வடமாகாண சபையின் ஊடாக ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரேரணையில், சிறிலங்காவை போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது, ஐக்கிய நாடுகளால் நியமிக்கப்படுகின்ற நீதிமன்றம் ஒன்றில் சிறிலங்காவை முன்னிலைப்படுத்துவதற்கு வலியுறுத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தாலோ, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ஒருவரை நியமித்து சிறிலங்காவில் இடம்பெறுகின்ற தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு கோருவதாக இருந்தாலோ தமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.