யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடைய, மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணி உருவான பின்னர், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்களுடன், நேரடித் தொடர்புள்ள, தெல்லிப்பழை சுகாதார மருத்து அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 120 பேருக்கு இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில், பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது, 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகவில்லை.
இதையடுத்து, இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, இன்று இன்று யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 563 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதாக, மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.