தமது சிபார்சுகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது சிறிலங்கா உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம் அர்த்தமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரியா என்பதை அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கடித வரைவை மொழி பெயர்த்தால் தெரிந்துவிடும். அவர் அனுமதி அளித்தால் குறித்த கடிதத்தை மொழி பெயர்த்துக் கொடுக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.