அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய முன்னெடுப்புக்களை பகிரங்கமாக மேற்கொண்டு வரும் அதேநேரம், மாகாண சபை முறைமையை முழுமையாக ஒழிப்பதற்குரிய செயற்பாடுகளையும் சூட்சுமமாக முன்னெடுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக அம்பலப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அம்பாறை போன்ற பல்லின மாவட்டங்களிற்குச் செல்லும் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு மாகாண சபை முறைமை, 13ஆவது திருத்தச்சட்டம், இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு எதிர்மறையான கருத்துக்களை விதைத்து பொஸ்னிய நிலைமைகளை சிறிலங்காவில் உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மாகாண சபை முறைமை அகற்றப்படும் பட்சத்தில் அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசியலமைப்பு ரீதியாக இருக்கின்ற சொற்ப விடயங்களும் இழக்கப்படும் நிலைiமை தமிழர்களுக்கு ஏற்படும் அபாயமுள்ளதோடு அவர்களுக்கான விடயங்களில் இந்தியாவின் கரிசனையும் முழுமையாக நீக்கும் நிலைமை ஏற்படும் பேராபத்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.