முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பில் பெரும் எண்ணிக்கையானோருடன் பழகிய ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அவருடன் தொடர்புடையவர்களை தேடி தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கோம்பாவில் பகுதியை சேர்ந்த மொத்த மரக்கறி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் தம்புள்ளைக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்து, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்குபவர் என கூறப்படுகிறது.
நேற்று மாலை வரை இவர் சமூகத்தில் நடமாடியுள்ளதால் புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொற்றாளர், கைவேலியிலுள்ள ஐயப்பன் ஆலயத்தில், நேற்று நடந்த மண்டல பூசையிலும் கலந்து கொண்டுள்ளார் என்றும், அந்த நிகழ்வில் 130இற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தொற்றாளர் மற்றம் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.