வவுனியா பொது மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மருத்துவமனையில் காய்ச்சலுடன், அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்ட பெண், அனுராதபுர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்தே, வவுனியா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்கள் உள்ளிட்ட 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும், 5 மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் நேற்று தொடக்கம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் வசித்து வந்த உலுக்குளம் ஜன உதான கிராமத்தில், சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பணியகம் மேலும் கூறியுள்ளது.
இதனிடையே, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி வியாபாரியுடன் தொடர்புடையவர்கள் என 194 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரக்கறி மொத்த வியாபாரங்களில் தொடர்புடைய 65 பேரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் பலரைக் கண்டறியும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





