மக்கள் எங்களை விமர்சனம் செய்வார்கள் என்று பயந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுத்து அவர்களை விமர்சனம் செய்கின்ற அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் பார்க்க முயன்று தோற்றுப்போதல் சிறப்பானது என யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு தொடர்பில் தனது முகநூல் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், யாழ் மாநகர சபையின் புதிய முதல்வரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
கடந்த மூன்று வருடங்கள் இடம் பெற்ற வினைத்திறன் அற்ற செயற்பாடுகளைக் கருத்தில் கொண்டு எதிர்பை தெரிவித்ததன் அடிப்படையில் முதல்வர் ஆர்னோல்ட் பதவியிழந்தார்.
தற்பொழுது மீண்டும் அவரே முதல்வராக போட்டியிடுகின்றார்.இந்நிலையில் வேறு நபர்கள் யாரும் போட்டியிடாத நிலை ஏற்படுமானால் அவரே மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
இந்நிலையில் அவர் சமர்ப்பிக்கும் பாதீடு கடந்த காலங்களில் போல் மீண்டும் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுவே நியதி. அதனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இச்சபை கலைக்கப்படும் நிலை ஏற்படும்.
வட்டார மக்களின் மேம்பாடு தொடர்பில் கூடிய வகிபாகம் வகிக்கின்ற ஒரு சபை கலைந்து போதல் ஏற்புடையது அல்ல என்பதன் அடிப்படையிலும் நாம் காலம் முழுவதும் மற்றவர்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக் காட்டி அதனை விமர்சனம் செய்து அதனை வாக்குகளாக மாற்றி விமர்சன அரசியலை மட்டும் தான் தொடருகின்றோம்.
பிழை விட்டுக் கொண்டே இருப்பவர் பிழை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் தொடர்ந்தும் அவர் அதில் இருப்பதற்கு தெரிந்தோ தெரியாமல் அனுமதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதேநேரம் தொடர்ந்தும் அவரை விமர்சனம் செய்து கொண்டே காலத்தை கடத்தி கொண்டு போதல் மட்டும் தான் செயற்பாடா?
ஆக விமர்சன அரசியலுக்கு அப்பால் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவ் மாநகர மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து காட்டவேண்டும் முயற்சிப்பதே சிறப்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.