கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபடும் முடிவில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கியுள்ள நிலையில், அவரது முடிவு குறித்து, அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியமே தனக்கு முக்கியம் என்றும், பிரசாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை சந்திப்பேன் என்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று, ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, ரஜினிகாந்தின் முடிவை வரவேற்றுள்ள அதிமுக பிரமுகர்களான அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா போன்றவர்கள், ரஜினிகாந்த் அதிமுகவுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்றும், தமது கட்சிக்குத் தான் ஆதரவு அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.