உலக வங்கி மகாவலி அதிகார சபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கு தான் துணைபோகின்றார்களா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர் நடேசன் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் எட்டாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள விசாயிகளால் பலவந்தமாக காணிகள் பிடிக்கப்படுகின்றது.
திடீரென வந்து ஒரு பகுதியினை பிடித்து தங்களுடைய பகுதி என்று பிரகடனம் செய்கின்றார்கள். மூன்று நாட்களுக்குள் இந்த பகுதியை விட்டு செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில் உங்களை வெட்டுவோம், மாடுகளை கொலை செய்வோம் என்று சொல்கின்றார்கள்.
பொலனறுவை மாவட்டத்திற்குள் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வந்து எங்களது பண்ணையார்களை விரட்டி விட்டு அங்கு பயிர் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.
அந்த இடத்தில் தமிழ் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு காணிகளை வழங்கி ஏன் செய்கை செய்திருக்க முடியாது. மகாவலி அதிகார சபை என்பது சிங்களவர்களை மட்டும் வாழ வைக்கின்ற தமிழர்களை அழிக்கின்ற செயற்பாட்டையே முன்னெடுக்கின்றது என்றார்.