தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை பலப்படுத்துவதற்காக இன்று கிளிநொச்சியில் முக்கிய சந்திப்புக்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளோம். ஆனால் தேசிய கட்சியுடன் இணைந்து அல்ல.
தமிழ்த் தெசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய அமைப்பு. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம் என்று தெரிவித்தார்.