கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும், மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக வந்துள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 124 மாணவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, வவுனியா, வேப்பங்குளத்தை சேர்ந்த 24 வயதுடைய மாணவன் ஒருவருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏனைய மாணவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வவுனியா – வேப்பங்குளத்தில் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர், வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணின் வீடு அமைந்துள்ள, வேப்பங்குளம் முதலாம் ஒழுங்கை மற்றும் 2, 3, 4 மற்றும் 5ம் ஒழுங்கை பகுதிகள் சிறிலங்கா காவல்துறையினரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.