யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் நேற்று இந்த உண்ணாவிரத போராட்டம், ஆரம்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கலைப்பீட மாணவர்களுக்கு பல்கலைக்கழத்துக்குள் நுழைய விதித்த தடையை மனிதாபிமான அடிப்படையில் நீக்கியுள்ளதாக நேற்று இரவு மாணவர்களை நேரில் சந்தித்த யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்திருந்தார்.
எனினும் தமக்கு எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும், நிபந்தனையின்றி தம் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, மாணவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இன்று காலை விரிவுரையாளர் ஜீவசுதன், மாணவர்களை நேரில் சென்று பேச்சு நடத்திய போதிலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.