தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் இன்று காலை இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில், நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கிளிநொச்சியில் பழைய கச்சேரிக்கு முன்பாக நடத்தப்பட்ட மற்றொரு கவனயீர்ப்பு போராட்டத்தில், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலிலும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாகவும் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை மாங்குளத்திலும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.