ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று முற்பகல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன் பின்னர் இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜெய்சங்கர், சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தம் முக்கியமானது என்றும், குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் தாம் நடத்திய பேச்சுக்களின் போது, கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் உதவியை சிறிலங்கா கோரியிருப்பதாகவும், இந்தக் கோரிக்கையை தாம், இந்திய தலைவர்களுக்கு எடுத்துச் செல்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று மதியம் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.