எதிர்வரும், 21 ஆம் நாளுக்குள் ரொறன்ரோ, பீல், யோர்க் மற்றும் வின்சர்-எசெக்ஸ் (Windsor-Essex) ஆகிய பிரதேசங்களில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் குடியிருப்பாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று, ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டின் முதல் மூன்று வாரங்களுக்குள், நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே தமது இலக்கு என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், எத்தனை குடியிருப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் இதில் அடங்குவார்கள் என்ற விபரத்தை ஒன்ராறியோ அரசாங்கம் வழங்கவில்லை,
அதேவேளை, டிசம்பர் இறுதி வாரத்தில் சுமார் 53 ஆயிரம் மொடேனா தடுப்பூசி மருந்துகள், ஒன்ராறியோ மாகாணத்திற்கு கிடைத்திருந்த நிலையில், மேலும் சுமார் 56 ஆயிரம் தடுப்பு மருந்துகள் இன்றைக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, தடுப்பூசி பணிக்குழுவை வழிநடத்தும் ஓய்வுபெற்ற ஜெனரல் றிக் ஹில்லியர், (General Rick Hillier) தெரிவித்துள்ளார்.