ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும், பிரேரணைக்கான, புலம்பெயர் அமைப்புக்களின் முன்மொழிவு ஆவணத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகளால் புதிய பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
குறித்த பிரேரணையின் உள்ளடக்கமானது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து, புலம்பெயர் அமைப்புக்களிடையே நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், இணக்கம் காணப்பட்ட முன்மொழிவுகளைக் கொண்ட ஆவணம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த நாட்களில் மெய்நிகர் முறையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்,ஏ.சுமந்திரன், சாணக்கியன் தவிர்ந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆவணத்தில் உள்ள முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
புளொட் தலைவர் சித்தார்த்தன் இந்த, ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ள போதும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிரந்தர தீர்வொன்று காணப்பட வேண்டும். அந்த தீர்வானது சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அடிக்குறிப்பிட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.