சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களுக்கான தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, எம்.எம்.பள்ளம் ராஜு மற்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ரௌத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கோவா முன்னாள் முதல்வர் லுசினோ ஃபெலிரோ, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா ஆகியோருக்கு கேரள மாநில மேலிடப் பார்வையாளர்கள் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிபிரசாத், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆலம்கீர் ஆலம், பஞ்சாப் கல்வியமைச்சர் விஜய் இந்தர் சிங்லா ஆகியோரும், அஸாம் மாநிலத்திற்கு சதீஸ்கார் முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஷகீல் அகமது கான் ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.