வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர சிகிச்சை நிலையமாகப் பயன்படுத்துவதற்கு, கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக, யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான இணைப்பதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள பொதுச் சந்தைகளை, உடனடியாக மீளத் திறப்பது சாத்தியமில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவை, நடத்துவதா- இல்லையா என்று சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடியே, தீர்மானிப்பது என்றும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய- சிறிலங்கா பக்தர்கள் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்வதால், இதுகுறித்து சிறிலங்கா அரசாங்க மட்டத்தில் தான், முடிவெடுக்க முடியும் என்றும், இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், உள்ளிட்ட அரசாங்க நிர்வாக அதிகாரிகளும், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளும், சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட ரீதியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்குப் பொறுப்பான இணைப்பதிகாரிகளாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.