நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 25ஆம் நாள், தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே வகுப்புகள் நடைபெறும் என்றும், தெரிவித்துள்ள அவர், கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள பாடசாலைகள், வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உயர்கல்வி அமைச்சு மற்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சு மற்றும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகிய இடங்களில் பணியாற்றும் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், பலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு அலுவலகங்களையும், தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.