யாழ்.பல்கலைக்கழத்தில் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டடமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இரண்டு மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்தனர்.
அவர்கள் பிரதான வாயிலின் அருகில் சமூக இடைவெளியைப் பேணி அமர்ந்தவாறு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
சிலமணிநேரத்தில் அவர்களுடன் மேலும் ஏழுவர் இணைந்துகொள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் தீர்க்கமாகியுள்ளது.
இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க அனுமதிக்கவேண்டும், பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு காவல்துறையினர் விலக வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தே மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
இந்நிலையில் அந்த மாணவர்களின் போராட்டம் தடையின்றி முன்னெடுப்பதற்காக கொட்டகை அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் அதற்கான அனுமதிகளையும் யாழ்.மாநகரசபை வழங்குவதாக மேயர் மணிவண்ணன் தெரிவித்தள்ளார்.
எனினும் மாலையளவில் தகரப்பந்தல் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் மழைப்பாங்கான காலநிலை நீடித்துவரும் நிலையில் மாணவர்கள் இரவுப்பொழுதை நடைபதையிலேயே கழிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.