’13வது சட்டதிருத்தம் குறித்து சிறிலங்காவே முடிவு செய்யலாம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பது இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,
“13 வது திருத்தச் சட்டம் ஊடாக தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது என்பதில் சிறிலங்காவில் உள்ள எதிர்கட்சி, ஆளும்கட்சி, இடதுசாரி கட்சிகள் என அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.
தமிழீழ தனி அரசு கேட்டு பல இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்து விட்டு, தமிழர்கள், இன்று மாகாண சபை அதிகாரங்களை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது.
ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
இந்திய – சிறிலங்கா ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்து, மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழர் தாயகத்திற்கான அதிகாரங்களை பெற்றெடுக்கும் வகையில் குரல் கொடுக்க வேண்டும். ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்