யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும். இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.