சிறிலங்கா அரசியல் மட்டங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர், தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, ரவூப் ஹக்கீமுடன் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நெருக்கமாக இருந்த 15 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
10 எதிர்க்கட்சி உறுப்பினர்களும், 5 ஆளும்கட்சி உறுப்பினர்களும் முதல்நிலை தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்டு அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கயந்த கருணாதிலக்க, தலதா அத்துகோரள, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பைசல் காசிம், எம்.எம் ஹரிஸ், தௌபீக், நசீர் அஹமட் உள்ளிட்டவர்கள் அதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், ஆகியோர் சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த, 35 சிறப்பு அதிரடிப்படையினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெற்றிகேயும் கொரானா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.