யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று வடக்கு- கிழக்கு முழுவதும், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளின் அழைப்பின் பேரில், இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்பெறுகிறது.
இந்த போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள நிலையில், தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதும், முடங்கியுள்ளன.
கடும் மழைக்கு மத்தியில், இந்த முழு அடைப்பு போராட்டம், முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள் மட்டும் இடம்பெறுகின்றன. ஆங்காங்கே சில அரச பேருந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளன.
இன்று பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை தராததால், வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்திரும், முழு அடைப்பு போராட்டம், முழுமையாக இடம்பெற்று வருகிறது.
நகரப் பகுதிகளில் வாகனங்கள், ஆட்கள் நடமாட்டமின்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும், இன்று முழு அடைப்பினால், இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.
முதல் முறையாக பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களிலும், முழு அடைப்பு போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.