யாழ்ப்பாண மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்குள், சுமார் 150 மில்லி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் கடும் மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது,
யாழ்ப்பாண குடாநாடு முழுவதிலும், பரவலாக 110 மி.மீற்றருக்கும் 150 மில்லி. மீற்றருக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
பயிர்கள் விளையும் கட்டத்தை எட்டியுள்ளதால், மழையினால் சேதமடைந்து நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.