ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வி.விக்னேஸ்வரன், அவரது அலுவலகத்திற்கு இன்று சென்று கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் பொருளாதார ரீதியாக வடக்கு கிழக்கு மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையால் செய்யக்கூடிய நன்மைகள் எவை என்பது பற்றியும் ஹனா சிங்கர் கேட்டறிந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கிப் பயணித்தால் போரின் பின்னர் வட கிழக்கிற்கு ஏதேனும் நன்மைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஹனா சிங்கர், தான் ஒருமுறை வடக்கு நோக்கி வந்ததாகக் குறிப்பிட்ட ஹனா சிங்கர், அந்தப் பகுதிகள் கிராமப்புறங்கள் போலவே காட்சியளித்ததாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, போரின் பின்னர் 11 வருடங்களாகியும் வடக்கு மாகாணத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற அவர், இவ்வாறு முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தமானது என சி.வி. சுட்டிக்காட்டினார்.
மேலும், போரின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு நேர்ந்தவற்றைப் பற்றி முற்றாக அறிந்துகொண்டாலே ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கிற்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம் சி.வி.குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமா என ஹனா சிங்கர் கேட்டுக்கொண்டதற்கு, இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கைவாங்க முடியாது. எனினும் தமிழர்களுக்குக் கூடிய வலுவுள்ள ஓர் அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் இதனை எதிர்பார்க்கலாம் என சி.வி.குறிப்பிட்டுள்ளார்.