வடக்கில் நேற்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 313 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வவுனியா நகரில் பசார் பகுதியைச் சேர்ந்த 24 வர்த்தகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, 31 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில், 25 பேர், வவுனியா, பசார் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் என்றும், இரண்டு பேர் வவுனியா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவைச் சேர்ந்த இருவருக்கும், யாழ்ப்பாணத்தில் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கும், பளையை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் தொற்றுக்குள்ளாகியிருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியா நிலைமைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2000 பேரினது பிசிஆர் சோதனை முடிவுகள் வரவேண்டியிருப்பதாகவும், அதன் பின்னரே வவுனியா நகரை முடக்குவது குறித்து ஆலோசிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வவுனியா நகரிலுள்ள அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டுள்ளதுடன், நெலுக்குளம், கோவில்குளம், பூந்தோட்டம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை தற்காலிகமாக முடக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்ம் நகரப்பகுதியில் உள்ள 42 பாடசாலைகளை நாளை மூடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.