ஒன்ராரியோ மாகாணத்தில் இரண்டாவது அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த அவசரகால நிலைமையில் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த அவரசகால நிலையானது நாளை வியாழக்கிழமை அதிகாலை 12.01 முதல் அடுத்த 28 நாட்களுக்கு அமுலாகவுள்ளது.
இதன்போது, அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்திற்கு மத்திரம் காவல்துறையினர் அனுமதிப்பர் என்பதோடு, அத்தியாவசிய சில்லறை விற்பனை நிலையங்களும் திறந்திருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நிலைமையில் காவல்துறையினர் மற்றும் விசேட கண்காணிப்பு பிரிவினர் கடமையில் இருக்கவுள்ளதோடு, தேவையற்ற நடமாட்டத்தினை மேற்கொள்பவர்கள் மீது கொரோனா பாதுகாப்பு சட்டங்களை மீறிய அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால நிலைமையில் கொரோனா பாதுகாப்பு விதிகள் மிகவும் இறுக்கமான வகையில் பின்னபற்றப்பட வேண்டும் என்பதோடு மாகாணம் அபாயத்தின் விளிம்பில் உள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மாகாண முதல்வர் டக் போர்ட் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.