கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிறநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்தார்.
தேசிய வளங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும். சுபீட்சமான எதிர்கால கொள்கை அடிப்படையில் அரசாங்கம் செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டு நிறுவனங்களுக்கு விற்கவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ, தீர்மானிக்கப்படவில்லை. கிழக்க முனையம் விற்பனைக்கு அல்ல என்ற தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கிழக்கு முனையம் குறித்து எதிர்த்தரப்பினர் போலியான கருத்துக்களை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். தேசிய வளங்களை பாதுகாக்கும் கொள்கை சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் கொள்கைத்திட்டத்துக்கு முரணாக செயற்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.