சீனாவினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை சிறிலங்காவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு சாதகமான பதில் அளிக்கப்படும் என்று, சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தை வழங்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சீன ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தை, சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்ன, சீன வெளிவிவகார அமைச்சின், நெறிமுறைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹோங் லீயிடம் கையளித்திருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள சீன தூதரகப் பேச்சாளர் ஒருவர், இந்தக் கோரிக்கைக்கு சீனா உயர் முன்னுரிமை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தடுப்புமருந்தை கொடையாக வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் Sinopharm மற்றும் சினோவாக் Sinovac ஆகிய தடுப்பு மருந்துகள், காத்திரமானது என்றும், பாதுகாப்பானது என்றும், இலகுவாக களஞ்சியப்படுத்தக் கூடியது என்றும்,சீன தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.