ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒரேயொரு முறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்தியபோது அதனைக் கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக குரல்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாளை தைப்பொங்கல் தினமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அந்தவகையில் நீதித் துறையினுடைய எனக்கான அறிவிப்பு வந்துள்ளது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்னுடைய வழக்கிலிருந்து என்னை முழுதாக விடுவித்து விடுதலை செய்துள்ளது.
ஜோசப் பரராஜசிங்கம் 2005இல் மரணிக்கும்போது நான் அரசியலில் இருக்கவும் இல்லை. அரசியல் செய்யும் எண்ணமும் இல்லை. அரசியலுக்கான எந்த முயற்சியும் எடுத்தவனும் அல்ல. 2008இல் தான் நான் மாகாண சபையில் போட்டியிட்டேன். அந்த வேளையில்தான் எனது முதலாவது வாக்கினைக்கூட செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.