நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும், அவர்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், சபாநாயகர் மகிந்த யாப்பாக அபேவர்த்தனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய போது சிறிலங்கா ஜனாதிபதியை நந்தசேன கோட்டாபய என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து, அவரை அச்சுறுத்தும் வகையில், சிறிலங்கா ஜனாதிபதி, தனக்கு இரண்டு விதமான குணவியல்புகள் உள்ளதாகவும், எவ்வாறான நிலைக்கும் தான் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள வெளியிடும் கருத்துக்களின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் ராஜித சேனாரத்ன, ஹலீம், வடிவேல் சுரேஷ், நளின் பண்டார ஜெயமஹா, கிங்ஸ் நெல்சன், மனுஷ நாணயக்கார, சுஜித் சஞ்சய பெரேரா, மரிக்கர், எரான் விக்ரமரத்ன, திஸ்ஸ அத்தநாயக்க, ரிஷாத் பதியுதீன், வேலுக்குமார் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும், கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும், நேற்று மாலை சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் சஜித் பிரேமதாச தலைமையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.