சிறிலங்கா அரசாங்கம், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சமூகத்துக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பல்வேறு நாடுகளில் வதியும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் ZOOM தொடர்பு ஊடகம் வழியாக நடத்திய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வழியாக இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.
‘நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல’ என்ற தொனிப்பொருளில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை யில், 2009 போரின் முடிவின்போது, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் மக்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துள், பாதிக்கப்பட்ட மாணவர்களால் நிறுவப்பட்டிருந்த நினைவிடம் இரவோடிரவாகத் தகர்க்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வெறுமனே மீள அடிக்கல் நடுவதோ, மாணவர்களின் போராட்டத்தினை இதன்மூலம் முடித்து வைப்பதோ தீர்வாகாது.
அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்ட எச்சங்களும் பேணப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவிடத்தைத் தகர்த்தமைக்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், தென்னிலங்கை ஆதரவுச் சக்திகளும் பரவலாக இணைந்து கொண்டமை ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுத் தோழமை வலுப்படுவதைக் காட்டுகிறது. இத்தகைய உணர்வுத் தோழமையின் வலுவும் தொடர்ச்சியும் வீச்சும்தான், ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கான நம்பிக்கையாக அமைவதுடன் ஒடுக்குதலை எதிர்கொள்வதற்கான பலமாகவும் அமையும் என்பதை உறுதியாக நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





