அடுத்த மாத நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை போடத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடத்திய கூட்டம் ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, அடுத்த மாத நடுப்பகுதியில் நாடு முழுவதிலும் 4 ஆயிரம் நிலையங்களில் தடுப்பூசிகளைப் போடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதற்கான வழிமுறைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, மாகாண, மாவட்ட சுகாதார, மருத்துவ அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஏனைய மருத்துவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும், இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.