மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7ஆயிரத்து 727 வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்களிப்பதற்கு தடுக்கப்பட்ட ஏழாயிரத்து 727 வாக்காளர்களையும், அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவு செய்து, அவர்களின் வாக்குரிமையை வழங்க வேண்டும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடித்தில், “வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறையூடாக, தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர்.
இவ்வாறு, வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கொழும்பில் வசிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மெதமுலானையில் வாக்களிக்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அத்தனகல்ல மற்றும் பொலனறுவையிலேயே வாக்களிக்கின்றனர்.
அவர்களுக்கு இவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றால் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, புத்தளத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு வாக்குரிமையை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது?
எனவே, இந்த வாக்காளர்களுக்கு அவர்களது சொந்த மாவட்ட வாக்காளர் இடாப்பில் மீளப் பதிவுசெய்து, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.