திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் ஆட்சியை, பொதுஜன பெரமுனவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த தவிசாளர் ஞானகுணாளன் பதவியிழக்க நேரிட்டது.
இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற புதிய தவிசாளர் தெரிவின் போது, 25 ஆண்டுகளாக கூட்டமைப்பின் வசமிருந்த சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கைமாறியுள்ளது.
22 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், நடைபெற்ற வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட ரத்நாயக்கவுக்கு 12 வாக்குகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட தங்கராசாவுக்கு 10 வாக்குகளும் கிடைத்திருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களில் இருவர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கும், மற்றைய உறுப்பினர் நவ்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
வரதர் அணி உறுப்பினர், ஈபிடிபி உறுப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் பொதுஜன பெரமுன உறுப்பினருக்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.