யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரை 41 ஆயிரத்து 248 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் ஆறாயிரத்து 435 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனைகளில் 644 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்ப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று பரவல் நெருக்கடியில் யாழ். போதனா வைத்தியசாலையானது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஏனைய சிகிச்சைகளையும் தடையின்றி மேற்கொண்டு வருகின்றது.
எனவே, குருதி அமுக்கம், நீரிழிவு, இருதய நோய் போன்ற நீண்டநாள் நோயாயளிகள் கிரமமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்