மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நிபுணர் குழு மற்றும், ஆணைக்குழுக்கள் முன்வைத்த அறிக்கைகளை ஆராய்வதற்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளார் என்று தெரிவிப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரைவைக்கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட இந்த ஆணைக்குழுவை சிறிலங்கா ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவிருப்பதாக வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் அல்லது சேவையில் உள்ள நீதியரசர் ஒருவர் தலைமை தாங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஐ.நா பொதுச்செயலரினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழு அறிக்கை, மற்றும் காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து, இந்த ஆணைக்குழு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறியும் என்றும் அட்மிரல் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவுக்கான வழிகாட்டல்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், இதனை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் சிறிலங்கா ஜனாதிபதியினால் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.