நான்கு தமிழ்க் கட்சிகள், சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் சிறிலங்கா தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை, இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள், நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக் கொண்டுள்ளவர்கள், சர்வதேச தலையீட்டை கோருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் புதிய தீர்மானம் கொண்டு வரப்படுவது நிச்சயம் என்பதால், சிறிலங்கா மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கட்சிகளின் கருத்துக்களை சாதாரணமாக கருதக்கூடாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது எனவும் றோகித போகொல்லாகம கூறியுள்ளார்.
சிறிலங்கா தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜெனிவா பெரும் சவாலாக இருக்கப் போகிறது என்றும், குறிப்பிட்டுள்ளார்.